Sunday, October 23, 2011

ஆக்ரா கோட்டை

 ஆக்ரா கோட்டை:

முகலாயப் பேரரசர்களின் கோட்டை. பல்வேறு முகலாய மன்னர்களால் ஆளப்பட்ட, பல்வேறு சரித்திர ரகசியங்களை உள்ளடக்கிய கோட்டையைப் பற்றி தான் இங்கே நாம் பார்க்கப் போகிறோம். கோட்டையின் தோற்றமே ஆயிரமாயிரம் கதைகள் சொல்கின்றன. கோட்டையில் 30 சதவீதம் தான் சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்து விடப்பட்டிருக்கிறது. மீதி 70 சதவீதம் இந்திய இராணுவப் படையின் ஆயுதங்களை வைப்பதற்காக உபயோகப்படுத்தப்படுகின்றது என்பதை நம்மால் அறிய முடிகிறது.  கோட்டையின் உள்ளே நுழையும் போது கோட்டையை சுற்றியும் அகழி இருப்பது கோட்டையின் பிரமாண்டத்தையும், பாதுகாப்பையும் நமக்கு உணர்த்துகிறது.  

ஆக்ரா கோட்டையின் முகப்புத் தோற்றம்

கோட்டையின் நீண்ட சுவர்
 கோட்டையின் நீண்ட சுவரும் அதன் அகலமும், படை வீரர்கள் கோட்டையை பாதுகாப்பதற்காக பணியில் ஈடுபடுவதற்கு ஏற்ப கோட்டை சுவரை வடிவமைத்துள்ளனர். கோட்டையின் பின்புறம் உள்ள  நீண்ட சுவரும் அதற்கு பின் தெரியும் யமுனை நதியும் படத்தில் காணலாம்.
(அடர்ந்த புதர்களும் மரஞ்செடி கொடிகளும் கோட்டையின் அழகை குறைக்கின்றன.)

ஆக்ரா கோட்டை - அகழி
 ஆக்ரா கோட்டையை சுற்றியுள்ள அகழியின் ஒரு பகுதி. 

ஆக்ரா கோட்டை


 ஆக்ரா கோட்டையின் பிரமாண்டமான கதவு
ஆக்ரா கோட்டையின் உள்ளே செல்லும் போதே என்னுடைய கற்பனைகள் பல நூறு ஆண்டுகள் பின்னோக்கி சென்றது. ஒரு பெரிய மரக்கட்டையாலான கதவு. பார்ப்பதற்கு மிகவும் பிரமாண்டமாய் அதே நேரம் மிக உறுதியாகவும் இருந்தது.

கோட்டை கதவைத் தாண்டி  உள்ளே சென்றால் சற்றே சாய்வான படிகள் அல்லாத பாதை. பாதையின் இரண்டு பக்கமும் இரு பெரும் சுவர்கள் எழுப்பப்பட்டு இருக்கின்றது. உள்ளே நடந்து செல்லும் போது அக்காலத்தில் மன்னர்கள் கோட்டையின் உள்ளே நடந்து செல்கையில் இருபக்க சுவர்களின் மேல் நின்று மலர்கள் தூவுவதும், மன்னரை வாழ்த்து கூறி கரகோஷம் எழுப்புவதும்  என் கண் முன் நின்றன. நினைப்பதற்கே பிரமிப்பாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. 
வெள்ளை மண்டபம்

உள்ளே வெள்ளை மண்டபம், அதன் கட்டமைப்பு மிக நேர்த்தியாக உள்ளது. வெள்ளை சலவைக் கல்லினால் செதுக்கப்பட்ட அரசர்கள் நின்று பார்வையிடும் இடத்தையும் அங்கு காண முடிகிறது. சற்றே அதன் பளபளப்புத் தன்மை மங்கியிருந்தாலும், அதிலுள்ள கலைத்திறன் மிக்க நுண்ணிய வேலைபாடுகள் நம் கண்களை இன்னும் விரிவடையச் செய்கின்றன. இதற்கு அருகிலேயே மேலே செல்வதற்கு படிகளும் உள்ளன. மேலே ஏறி சென்றால் இடது பக்கம் வெள்ளை சலவை கல்லினால் செதுக்கப்பட்ட மன்னர்கள் பிரத்யேகமாக தொழுகை  செய்வதர்க்கென்று ஓர் சிறிய இடம். முழுவதும் வெள்ளை பளிங்கினாலான இந்த மசூதி முகலாய மன்னன் ஷாஜஹானால் கட்டப்பட்டது. அதன் குறிப்புகளை கல்வெட்டில் செதுக்கி அங்கேயே பதித்துள்ளனர்.  

ஷாஜஹானால் கட்டப்பட்ட மசூதி
அதை ரசித்து விட்டு மற்றொரு பக்கம் வந்தால் ஆக்ரா கோட்டையிலிருந்து தாஜ்மஹாலின் அழகிய தோற்றம் நம்மை மேலும் பரவசமடையச் செய்கிறது. கோட்டையின் ஒரு பக்கத்தில் எங்கிருந்து பார்த்தாலும் தாஜ்மஹால் தெரியும் வண்ணம் கோட்டையை வடிவமைத்திருப்பது சிறப்பான ஒன்று. ஒவ்வொரு அறைக்கும் வெளியே ஒரு கல்வெட்டு உள்ளது. பல அறைகள் பூட்டியே கிடக்கின்றன. பூட்டியிருக்கும் அறைகளுக்குள்ளே என்ன இருக்கும், எப்படி இருக்கும் என்று எல்லையில்லா கற்பனை எனக்குள் எட்டியது. 
தாஜ்மஹாலின் தோற்றம்

ஷாஜஹானால் மறு சீரமைப்பு செய்யப்பட்ட பகுதி முழுவதும் தாஜ்மஹால் தெரியுமாறு அமைக்கப்பட்டது. கனவு காண்பதற்கு என்று தனியாக ஒரு அறை, இன்னும் பல அறைகள் பலப்பல விஷயங்களுக்காக கட்டியிருக்கின்றனர்.  தன் கண் பார்வையிலிருந்து எப்போதும் மும்தாஜ் விலகிவிடக் கூடாதென்று  தாஜ்மஹாலையும், அதை எந்நேரமும் தான் ரசித்து கொண்டிருப்பதற்காக ஆக்ரா கோட்டையின் ஒரு பகுதியையும் ஷாஜஹான் மிக கவனமாகவும், நேர்த்தியாகவும் கட்டியுள்ளார். 

ஷாஜஹானின் அறை: 
மும்தாஜ் இறப்பின் செய்தியை கேள்வியுற்று ஷாஜஹான் ஒரு தனியறையில் உள்சென்று தாளிட்டு ஒரு வாரத்திற்கும் மேல் வெளியே வராமல் மும்தாஜ் நினைவாக அழுது கொண்டிருந்தார். அவர் உயிருடன் தான் இருக்கிறார் என்பதை அவ்வறையிலிருந்து வந்த முனகல் சத்தத்தை வைத்தே தெரிந்து கொண்டனர். பின்னர்தான் ஷாஜஹான் மும்தாஜுக்காக ஒரு மஹால் எழுப்ப வேண்டும் என்று முடிவு செய்தார். அவர் பூட்டிக்கொண்டதாகக் காட்டப்படும் அறை இன்றும் பொதுமக்கள் பார்வைக்கு உள்ளது. ஆனால் அவ்வறை பூட்டப்பட்டுள்ளது.  
ஷாஜஹானின் அறை
அந்த அறையை பார்த்த பொழுது அதனுள் என்ன இருக்கும், ஷாஜஹான் எப்படி அதனுள் இருந்திருப்பார் என்ற என் கற்பனை மேலும் இரட்டிப்பானது. மேலும் அதன் உள்ளே சென்று பார்க்கும் ஆர்வமும் என்னுள் எழுந்தது. இந்த அறை மும்தாஜினுடையது. அவளுடைய இறப்பிற்கு பின் ஷாஜஹான் இந்த அறையில் தான் தன்னுடைய வாழ்நாளை கழித்தார். பின்னர் ஷாஜஹானுடைய மகன் ஔரங்கசிப்பால் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதும் இந்த அறையில் தான். இந்த அறைக்கு எதிரில் ஒரு மண்டபம் உள்ளது. பளிங்கினால் செதுக்கப்பட்ட அந்த மண்டபம் பார்ப்பதற்கு மிக அழகாக உள்ளது. 

மண்டபத்தின் தரையில் பளிங்கு கல்லில் செதுக்கப்பட்டுள்ள கலைநயமிக்க வேலைபாடுகள். மேலும் பல அறைகள் மிக்க வேலைபாட்டுடனும், கலைநயத்தோடும் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிதிலமடைந்த கதவுகளையும் நம்மால்  காண முடிகிறது. எண்ணற்ற அறைகள் இருந்த போதிலும் அவை அனைத்தும் பூட்டியே கிடப்பதால் ஒருவித துர்நாற்றம் வீசுகிறது. ஒவ்வொன்றாக பார்த்து பிரமித்து கோட்டையின் வெளிப்பிரகாரத்திற்கு வந்தால் கல்லினால் செதுக்கப்பட்ட ஒரு பெரிய தொட்டி உள்ளது. அது ஜகாங்கீர் குளிப்பதற்காக செய்யப்பட்ட தொட்டி. சுமார் 6 அடி உயரம் கொண்ட தொட்டி நம்மை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
ஜகாங்கீர் தொட்டி
 கோட்டையின் உள்ளே உள்ள சிவப்பு கல்லில் செதுக்கப்பட்ட வாயிலை கீழுள்ள படத்தில் காணலாம். 




மன்னர்களின் வாழ்க்கை முறைகளும் அவர்களின் கலாச்சாரங்களும் என்னை மென்மேலும் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தியது. வரலாற்றுச் சிறப்புமிக்க ஆக்ரா கோட்டையை முழுவதுமாக கண்டு ரசிக்க ஒரு நாள் மட்டும் போதாது. மேலும், அக்கால மன்னர்களால் பல்வேறு தொழில்நுட்பங்கள் வளர்ந்திருக்கின்றன என்பதை அங்குள்ள கல்வெட்டுக்களால் காண முடிகிறது.

இங்கு தான் வீர சிவாஜியை அக்பர் கைது செய்தார். இன்றும் இக்கோட்டைக்கு வெளியே வீர சிவாஜி குதிரையில் வாள் ஏந்தியபடி நிற்கிறார்.
வீர சிவாஜி
இன்னும் ஆயிரமாயிரம் கதைகள் இது போன்ற கோட்டைகளில் ஒளிந்து கிடக்கின்றன. அவற்றை உள்ளே சென்று ஆராய்ந்தால் நமக்கு பிரமிப்பும், ஆச்சர்யங்களும் நிறையவே ஏற்படும்.


Tuesday, October 18, 2011

தாஜ்மஹால்


தாஜ்மஹால் காதலின் சின்னம், ஏழு உலக அதிசயங்களுள் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. தாஜ்மஹாலின் மற்றொரு பக்கமான, அதன் கட்டிடக்கலை மற்றும்     தாஜ்மஹாலைப் பற்றிய ஷாஜஹானின் கனவுகள் பற்றி மிகச்சிலரே அறிந்திருப்பர்.

              டெல்லியிலிருந்து சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஆக்ரா. ஆக்ராவை ஆக்ரா கன்ட் என்று தான் அழைக்கப்படுகிறது. கன்ட் என்றால் இராணுவப்பகுதி என்று பொருள். ஆக்ரா இரயில் நிலையத்திலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தாஜ்மஹால்.  தாஜ்மஹால் செல்ல மூன்று வழிகள் உள்ளன. அவை கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு வழிகள்.  தெற்கு வாசல் நேரே  தாஜ்மஹால் அமைந்துள்ளது. தெற்கு வாசல் வழியே உள்ளே சென்றால் தாஜ்மஹால் நம் கண் முன்னே பிரகாசிக்கும். நான்கு பக்கமும் தூண்களை கொண்டு நடுவே ஒரு பிரமாண்டமான வெள்ளை பளிங்கு மாளிகை, சூரிய ஒளி பளிங்கின் மீது பட்டு அதன் அழகை மேலும்  கூட்டுகிறது. 
தெற்கு வாயிலிலிருந்து தாஜ்மஹாலின் தோற்றம்
                                  
 தாஜ்மஹால் வரலாறு:
ஷாஜஹான் என்னும் முகலாய மன்னன் தன் மனைவி மும்தாஜின் பிரிவை தாங்க முடியாமல் அவளுக்காக எழுப்பிய காவியம், தாஜ்மஹால். காதலின் சின்னமாக கருதப்படும் தாஜ்மஹால் உலக அதிசயம் என்றால் அந்தத் தாஜ்மஹாலின் கட்டிடக்கலை பற்றிய செய்திகள் நம்மை வியப்பில் ஆழ்த்தும். 
              நான்கு பெரிய கோபுர தூண்கள் வெள்ளை மாளிகையை சுற்றி நிற்கின்றன. தூரத்தில் நின்று பார்ப்பதற்கு ஒவ்வொரு தூணும் வெவ்வேறு உயரம் கொண்டதாய் தெரியும். ஆனால், நான்கு தூண்களும் ஒரே உயரத்துடன் இருப்பது இதன் சிறப்பு. மிக உயரமான வாயில் வழியே உள்ளே  நுழையும் போது அதன்  சுவர் முழுவதும் வெள்ளைப் பளிங்கில் செதுக்கிய நுண்ணிய கலைநயமிக்க வேலைபாடுகள் நம்மை வியக்க வைக்கும். மாளிகையின் உள்ளே சென்றால் பளிங்கினால் செய்த வேலியின் நடுவில் மும்தாஜ் மற்றும் ஷாஜகனின் கல்லறைகள்.  

மும்தாஜ் மற்றும் ஷாஜஹான் கல்லறைகள்
  மாளிகையின் நடுவில் மும்தாஜின் கல்லறை. அதற்கு அருகிலேயே ஷாஜஹானின் கல்லறை உள்ளது. மாளிகையின் உள்ளே குளிர்ச்சியாக இருப்பது நமக்கு ஒரு இதமான உணர்வை ஏற்படுத்தும். வேலியிலும் வேலைபாடுகள் அதிகம் காணப்படுகின்றன. பளிங்கு கற்களைக் கொண்டு இவ்வளவு நுணுக்கமாக செதுக்க முடியும் என்பதை பார்க்கும் போது பிரமிப்பு அதிகமாகிறது. பல நூறு ஆண்டுகள் ஆன பின்னரும் பளிங்கு வேலியின் பளபளப்பு  மற்றும் வளவளப்புத் தன்மை மாறாமல் இருப்பது அதன் இன்னுமொரு சிறப்பு. அப்படியே பின்புறம் வெளியே சென்றால் யமுனை ஆற்றின் அழகையும் ரசிக்கலாம். மிக நீண்ட அகலமான ஆறு நம்மை மேலும் பரவசத்தில் ஆழ்த்தும்.  

நுண்ணிய வேலைபாடுகள் நிறைந்த பளிங்கு வேலி:


 வேலியின் உள்ளே தெரிவது மும்தாஜ் மற்றும் ஷாஜஹான் கல்லறைகள்.


யமுனை நதியின் அழகிய தோற்றம் 
 தாஜ்மஹால் பற்றிய ஷாஜஹானின் கனவுகள்:


ஷாஜஹான் மும்தாஜிற்கு தாஜ்மஹால் எழுப்பியது போலவே தனக்கும் ஒரு மகாலை எழுப்ப வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்ததாகவும், அவருடைய இறப்பிற்கு பின் அந்த மாளிகையில் அவருக்கு சமாதி எழுப்பவும் அவர் எண்ணம் கொண்டிருந்தார். அந்த மகாலை தாஜ்மஹாலிற்கு எதிரே, அதாவது யமுனை ஆற்றின் மறு கரையில் கட்ட வேண்டும் என்று எண்ணியிருந்தார். அதோடு இரண்டு மகாலையும் இணைப்பதற்கு வெள்ளியால் பாலம் அமைக்கவும் அவர் முடிவு செய்திருந்தார். ஆனால் அதற்குள்ளாக அவருடைய மகன் ஔரங்கசிப்பால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என வரலாறு கூறுகிறது. 
பளிங்கு கல்லில் பூக்கள் செதுக்கப்பட்டுள்ளது
பளிங்கினால் செதுக்கப்பட்டது 



யமுனை ஆற்றின் மறு கரையில் ஷாஜஹான் கல்லறை அமைப்பதற்காக தேர்ந்தெடுத்த இடமாக கருதப்படுவது

 
 ஆக்ரா கோட்டை:
தாஜ்மஹாலிலிருந்து ஆக்ரா கோட்டையின் ஒரு பகுதி தெரியும். கோட்டையின் நீண்ட சுவர்களும், அங்குள்ள  வெள்ளை கோபுரங்களும் மிக அற்புதமாக இருக்கும்.
 
தாஜ்மஹாலிலிருந்து தெரியும் ஆக்ரா கோட்டையின் ஒரு பகுதி
இத்தனை பெருமைமிக்க, வரலாற்று சிறப்புமிக்க தாஜ்மஹால் இப்போது சற்று பொலிவிழந்து காணப்படுகிறது. சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசுபடுவதன் காரணமாக வெள்ளை மாளிகையின் பொலிவு சற்றே மங்கிக்கிடப்பது வேதனை அளிக்கிறது. நமது இந்திய அரசு உலக அதிசயமான தாஜ்மஹாலை காக்கும் பொருட்டு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது ஆறுதல் அளிக்கிறது.

டெல்லியிலிருந்து இந்திய சுற்றுலாத்துறை போக்குவரத்து வசதிகளை சுற்றுலாப் பயணிகளுக்கு செய்து கொடுக்கின்றது. பல்வேறு நாட்டினரும் தாஜ்மஹாலைக் காண ஆக்ராவிற்கு வருகை தருகின்றனர். தாஜ்மஹாலின் அழகைக் கண்டு வியக்கின்றனர். இரயிலில் பயணம் செய்தால் 3 மணி நேரத்தில் ஆக்ரா கண்ட்டை அடையலாம். நிஜாமுதினிலிருந்து பல்வேறு இரயில்கள் ஆக்ரா வழியாக செல்கின்றன. அவை மூலமாகக் கூட நாம் ஆக்ராவை சென்றடையலாம். ஒருவருக்கு 20 ரூபாய் கட்டணம், புகைப்படம் எடுக்க கட்டணம் ஏதும் இல்லை. ஆக்ராவிற்கு சென்றால் தாஜ்மஹால் மட்டுமின்றி ஆக்ரா கோட்டை மற்றும் ஆக்ராவிற்கு அருகிலுள்ள மற்ற சுற்றுலாத்தலங்களையும் கண்டு களிக்கலாம்.